தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதாக அரசாங்கம் கூறினாலும், அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சட்டத்திட்டங்களால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சி நிலைக்கே கொண்டு செல்கின்றது என்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதாக அரசாங்கம் கூறினாலும் கொண்டுவரப்படும்
சட்டதிட்டங்களை பார்க்கும் போது தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடையும்
நிலைமையே உள்ளது.
ஜனாதிபதி கடந்த ஜூன் 28ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானியில் பயறு, உளுந்து,குரக்கன், கவுப்பி போன்ற தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதனை இங்கேயே உற்பத்தி செய்ய முடியும். ஏன் இறக்குமதி செய்ய வேண்டும். இறக்குமதிச் செய்தால் இங்குள்ள விவசாயிகளே நிர்க்கதியாகும் நிலை ஏற்படும். எமது நாட்டின் விவசாயத்துறை மேலும் வீழ்ச்சிக்குள் செல்லும் என்றார்.
இதேவேளை, வாகன இறக்குமதி தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 15 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் பல்வேறு தரப்பினர் உள்ளனர். அதனூடாக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது சிறந்தது. ஆனால் அமைச்சரவையில் தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்களில் முதலீட்டு சபையின் ஊடாக நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றது.
துண்டுகளாக கழற்றி வாகனங்கள் வந்து இங்கு அவற்றை பொருத்தி வாகனங்கள் இங்கே ஒடும். அதற்காக 70 வீதம் வரையில் தீர்வை வரிச் சலுகை வழங்கப்படுகின்றது. பெறுமதி சேர்வை இன்றி அமைச்சரவை அனுமதியுடன் இவ்வாறாக வாகன இறக்குமதிக்கு ஒரு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. வாகனங்களின் விலைகளை அந்த நிறுவனமே தீர்மானிக்கும். இதில் பாரதூரமான தவறுகள் உள்ளன என்றார்.