மட்டக்களப்பில் ஆசிரியர்கள் சுகவீன லீவுப் போராட்டம்!




 (மட்டக்களப்பு நிருபர்)



 

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (09) சுகவீன லீவுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும், கல்விச் சுமையை பெற்றோர்கள் மீது சுமத்துவதை நிறுத்த வேண்டும், இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் அடக்கு முறைச் செயற்பாடுகள், அத்துடன் அச்சுறுத்தும் அறிக்கைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அதிபர்கள், ஆசிரியர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்த சுகவீன விடுமுறைப் போராட்டத்தினால்  கல்வி நடவடிக்கைகள்  பாதிக்கப்பட்டன.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

சில பாடசாலைகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் வருகை தந்த நிலையில் மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்பட்டன. பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் திரும்பிச் சென்றதைக் காண முடிந்தது.

இந்நிலையில் மாவட்டத்திலுள்ள தபால் திணைக்கள ஊழியர்களும் சம்பள உயர்வு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டதனால் ஆசிரியர்கள் தமது சுகவீன விடுமுறையை பாடசாலைக்கு அறிவிக்க முடியாத நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.