(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பின் பாடுமீன்களின் சமர் என வர்ணிக்கப்படும் மாபெரும் மகளிர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சிசிலியா பெண்கள் பெண்கள் தேசிய பாடசாலை அணியை வீழ்த்தி வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை அணி கிண்ணத்தைச் கைப்பற்றியது.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் 11 ஆவது வருடமாக நேற்று சனிக்கிழமை (06) நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வின்சன்ட் மகளிர் பாடசாலை 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி சாமினி ரவிராஜ்,எம்.ஹரிகரராஜ்,வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை மற்றும் சிசிலியா பெண்கள் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.