கடிதங்களை ஆடையில் தொங்கவிட்ட நிலையில் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

 

 


யாழ்ப்பாணம் (Jaffna) - நவாலி வடக்கு பகுதியில் பெண் ஒருவர் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்

குறித்த போராட்டமானது, நேற்று (29.07.2024) கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் நடத்தியுள்ளார்.

நவாலி வடக்கு ஜே/134 கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரின் உதவியாளராக கடமையாற்றும் பெண்ணொருவர் உதவித் திட்டங்களில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்து குறித்த பெண் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

அந்தவகையில், உதவியாளராக கடமையாற்றும் பெண், வருகின்ற உதவித் திட்டங்களை தனக்கு விரும்பியவர்களுக்கு வழங்குவதாகவும், பொதுக் கூட்டங்களுக்கு சமூகமட்ட பொது அமைப்புகளுக்கு அறிவித்தல் வழக்குவதில்லை எனவும், பொதுவான இடங்களில் கூட்டத்திற்கான அழைப்பு அறிவித்தல் ஒட்டப்படுவதில்லை எனவும், இவற்றை தனக்கு விரும்பியவர்களுக்கு தொலைபேசி மூலம் அறியத் தருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இது தொடர்பான முறைப்பாட்டை தான் ஏற்கனவே அரசாங்க அதிபர் மட்டத்துக்கு கொண்டு சென்ற நிலையில், இதற்கு முன்னர் இருந்த கிராம சேவகர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எனினும், புதிதாக வந்த கிராம சேவகரும் அந்த பெண்ணின் கருத்துப்படியே செயற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

 போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தான் அனுப்பிய கடிதங்கள், தனக்கு கிடைத்த கடிதங்களை ஆடையில் தொங்கவிட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.