2015ம் ஆண்டு மத்திய வங்கி பிணை முறி மோசடியானது நாட்டின் வீழ்ச்சிக்கான ஓர் முக்கிய காரணமாகும்- முன்னாள் கணக்காய்வாளர் நாயகம்

 


தேசிய மக்கள் சக்தியின்  ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இலங்கையில் கணக்காய்வாளர் நாயகம் பதவி வகித்த இருவர் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகங்களான சரத் சந்திரசிறி மாயாதுன்ன  மற்றும் காமினி விஜேசிங்க ஆகியோரே இவ்வாறு அனுரவிற்கு தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள், கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சந்திரசிறி மாயதுன்ன, “தீர்மானமிக்கதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தற்போதைய மற்றும் கடந்த கால தலைவர்களே நாட்டின் பொருளாதார நிலைக்கு காரணமாகும்.

நாட்டை அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புதிய அரசியல் தலைமை தேவைப்படுகின்றது என்றார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த காமினி விஜேசிங்க, 2015ம் ஆண்டு மத்திய வங்கி பிணை முறி மோசடியானது நாட்டின் வீழ்ச்சிக்கான ஓர் முக்கிய காரணமாகும்.

நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கேட்கின்றனர்” என்றார். மேலும், இருவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டுமென கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.