மட்டக்களப்பு கல்லடி உப்போடை - நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயவருடாந்த சடங்கு உற்சவம்- 2024 08 04 இன்று ஆரம்பமாகிறது









 




பிரபா பாரதி


இன்றைய கால கட்டங்களில் பிரசித்தி பெற்ற பல ஆலயங்களில் வரலாற்று
உண்மைகள் மாற்றம் செய்யப்பட்டும், மறைக்கப்பட்டும் வருவது நாம் அறிந்ததே.
இவ்வாறான சம்பவங்களால் புகழ் பூத்த கிராமங்களின் கௌரவங்கள் கூட பல
இடங்களில் இடர் படுவதை உணர்கின்றோம். நமது புதிய இளையோர் சந்ததிக்கு
சரியான முறையில் வரலாற்று பதிவுகளை விட்டுச்செல்வது நமது தலையாய
கடமையாகும். இதனடிப்படையில் அன்னை பேச்சித்தாயாரை அவளது பிள்ளைகள்   சடங்கு உற்சவம் மூலம் வழிபட்டு, மகிழ்வடையும் இத்தருணத்தில் இக்கட்டுரை    பிரசுரிக்கப்படுகின்றது


சக்தி வழிபாடு நமது பிரதேசத்தில் தொண்டு தொட்டு வியாபித்து நிற்கின்றது. நமது   முன்னோர்கள் இவ்விடத்தில் மூன்று தேத்தா மரங்கள் முக்கோண வடிவில் நிற்பதை   அவதானித்து,     தற்போது பேச்சியம்மன் ஆலயம் இருக்கும் தேத்தா மரத்தின் கீழ்    பேச்சியையும், வலப்புறமாக இருந்த தேத்தா மரத்தின் கீழ் காளியையும், மேற்கு   திசையாக இருந்த தேத்தா மரத்தின் கீழ் மாரியையும் வழிபட்டு வந்தனர். 1824 ஆம்  ஆண்டு காலப்பகுதியில் வில்வ மரமொன்றின் கீழ் பிள்ளையார் ஆலயம் ஒன்றையும்  சிறியதாக அமைத்து சக்தி வழிபாட்டுடன் விநாயகர் வழிபாட்டையும் சேர்த்து வழிபடத்தொடங்கினர்.


அன்னை பேச்சியம்பாள் மீதும் விநாயகர் பெருமான் மீதும் அதிக பக்தி
கொண்டவர்களான சின்னவர் சின்னாத்தை, உமையாத்தை சகோதரிகள் ஆலயங்களின்      மேம்பாட்டிற்காக 1826 ஆம் ஆண்டு தங்களது சகோதரரான சின்னவர் கதிர்காமர்    அவர்களுக்கு நிலத்தை கையளித்தனர். அவர் தனது மகனான கந்தப்பெருமாள்   அவர்களிடம் ஆலயங்களின் பொறுப்புக்களை கையளித்து முகாமையாளராக    நியமித்தார். 1884 ஆம் ஆண்டு முகாமையாளர் பொறுப்பு கதிர்காமத்தம்பி     உடையாரிடம் கையளிக்கப்பட்டது.


1912 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போதைய விவேகானந்தா மகளிர் கல்லூரியின்
ஆரம்ப கட்டிட பணிகளுக்காக மாரியம்மன் பந்தல் வைத்து வழிபட்டு வந்த தேத்தா  மரம் வெட்டி அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஊர் மக்கள் இதற்கு  எதிர்ப்பினை தெரிவித்த போதும் மக்களின் கல்வி தேவைக்காக அம்மரம்   வெட்டப்பட்டது.

இச்சம்பவத்திற்கு பின் பெரும்பாலான ஊர் மக்களுக்கு அம்மை நோய் கண்டது.
மக்கள் பயந்தவர்களாக அம்மனிடமே சரணடைந்தனர். கந்தப்பர் என்ற அம்மன்
அடியவர் ஒருவர் இன்றைய பேச்சியம்மன் ஆலயம் அமைந்திருக்கும் அதே தேத்தா    மரத்தின் கீழ் வேப்பிலை கும்பம் ஒன்றை வைத்து மக்களின் நோய் நீங்க   வேண்டுமென்று வழிபட்ட போது, உரு வர பெற்று தெய்வமாடி தன் வாக்கிலே   பேச்சியும் மாரியும் ஒன்றே, பேச்சி குடியிருக்கும் தேத்தா மரத்தடியிலேயே மாரியும்    குடியிருக்கிறாள் மாரியை வணங்கியது போல் பேச்சியை வழிபாடு செய்யுங்கள் என்று    கட்டு சொல்லியிருக்கிறார். 

இச்சம்பவம் மூலம் மனம் தெளிந்த மக்கள் மாரியும் காளியும் பேச்சியும் ஒன்று தான்   என்று உணர்ந்து, பேச்சியை தங்கள் மனதிலே முழு முதலாக இருத்தி வழிபாடு   செய்யத் தொடங்கினர். அதன் பின் மக்களிடம் காணப்பட்ட அம்மை நோய் குறைந்து    மறைந்து விட்டது. பேச்சியம்மன் மீது மாறாத ஆழ்ந்த பக்தி மக்கள் மத்தியில்   ஏற்பட்டு பேச்சியம்மன் வழிபாடு மிக தீவிரமடைந்தது.

 1917ஆம் ஆண்டு கதிர்காமத்தம்பி உடையார் அவர்கள் சிவபதம் அடைந்த பின்
அவரது மகன் K.O.வேலுப்பிள்ளை அவர்கள் முகாமையாளராக பொறுப்பேற்றார். இவர்  செயற்பாடுகளை விரிவு படுத்தி பஞ்சாயத்து சபை ஒன்றையும் நிறுவினார். மக்களுடைய வழிபாட்டுக்காக நிரந்தரமானதொரு அம்பாள் விக்கிரகம் பிரதிட்டை  செய்யப்பட வேண்டுமென்பது அனைவரதும் விருப்பமாக இருந்தது. இதன் முக்கியம்,    அவசியங்களை உணர்ந்து கொண்ட தர்மகர்த்தா வேலுப்பிள்ளை அவர்கள்   இந்தியாவிலிருந்து அம்மன் விக்கிரகத்தை கொண்டு வந்தார்..

 இவ்விக்கிரகம் படகு மூலம் எடுத்து வரப்பட்டு தர்மகர்த்தாவின் வீட்டின் அருகில்  உள்ள வாவித்துறைக்கு கொண்டுவரப்பட்டது. அது அவரது வீட்டில் புனிதமாக   பேணப்பட்டு ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. படகிலிருந்த விக்கிரகத்தை    பயபக்தியுடன் சுமந்து கரை சேர்த்தவர் நொச்சிமுனை கிராமத்தை சேர்ந்த  தவிட்டுசாக்கர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட திரு. முருகப்பர் கந்தையா என்பவர்  என்பதை பல முன்னோர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

இவ்விக்கிரகத்தை கல்லால் ஒரு ஆலயம் அமைத்து வைப்போம் என்று ஆலய
பஞ்சாயத்து சபையினர் சிந்தித்த நிலையில், பலரது கனவில் தாயார் தோன்றி  'எனக்கு கல்லால் ஆலயம் அமைக்க வேண்டாம் ஒலைக்குடிசையிலேயே என்னை   வைக்க வேண்டும் என்றும், எக்காலத்திலும் கல்லால் ஆலயம் கட்ட முயற்சிக்க   வேண்டாம்' என்றும் அன்னை கூறியதும், ஒலைக்குடிசையில் மாம்பழ குருக்களால்  அம்பாள் சிலை ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதன் பின்பு தான் வருடாந்த சடங்குடன்   வெள்ளிக்கிழமை பொங்கல் பூசைகள் மிக சிறப்பு பெற்றது. தற்போது பூரணை    தினங்களிலும் அன்னைக்கு பூசை வழிபாடுகள் நடைபெற்று வருவதும்    குறிப்பிடத்தக்கது.

1947 இல் தர்மகர்த்தா K.O .வேலுப்பிள்ளை அவர்கள் சொந்தசெலவில் நடத்தி வந்த   ஆலயங்களை நல்ல நோக்குடன் கல்லடி உப்போடை, நொச்சிமுனை மக்களின்   கைகளில் ஒப்படைத்தார். முகாமையாளர் பொறுப்பு வேலுப்பிள்ளை நமசிவாயம்   அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குறுகிய காலப்பகுதிக்குள் இவர் தனது   சகோதரரான வேலுப்பிள்ளை கதிர்காமத்தம்பியிடம் இப்பதவியை ஒப்படைத்தார்.   கிராம   மக்களுடனும் நிர்வாகத்துடனும் இணைந்து ஆலயத்தின் வளர்ச்சிக்கு 60 வருட காலம்    பெரும் பங்களிப்பை நல்கி 2007 ஆம் ஆண்டு இப்பதவியை நமசிவாயம் ஹரிதாஸ்  அவர்களிடம் ஒப்படைத்தார். இன்று வரை இவர் சேவையாற்றி வருகின்றார்.  

அன்றிலிருந்து இன்று வரை இக்கிராம மக்கள் தங்கள் தாயாரின் ஆலயத்தை பெரும்    பக்தியுடன் பாதுகாத்து வருகின்றனர். பேசும் தெய்வமாக அன்னை இக்கிராமங்களை   பாதுகாத்து வருகின்றார். தற்போது இவ்விரு கிராமங்கள் குறிச்சிகளாக பிரிக்கப்பட்டு,   25 அன்னையின் பிள்ளைகள் மகா சபையினரால் தெரிவு செய்யப்பட்டு நிர்வாக    செயற்பாடுகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது திரு.குணசீலன்    அவர்கள் தலைவராகவும் திரு.வசந்தகுமார் அவர்கள் செயலாளராகவும்
திரு.மோகன்ராஜ் அவர்கள் பொருளாளராகவும் அவருடன் இணைந்த 22 நிர்வாக
உறுப்பினர்கள் மிக சிறப்பாக நிர்வாகத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆரம்ப  காலத்தில் சொத்தியர்,நொங்கர்,வேலுப்பிள்ளை,கண்ணப்பர்,நாகமணி வைத்தியர்,நாகமணி கணபதிப்பிள்ளை,நாகமணி பொன்னையா ஆகியோரும்,தற்போது கிருஸ்ணகுமார் அவர்கள் பூசை இயற்றி வருவது குறிப்பிடத்தக்கது.பக்க பலமாக கிராம இளைய  தலைமுறையினரும்,  வினாயகர் பேச்சி பிள்ளைகளும் பெரும் பங்களிப்பு நல்கி தங்களை அர்ப்பணித்து நிற்பது பெரும் பலமாக இருக்கின்றது. 

ஆண்டு தோறும் ஆடி மாத அமாவாசையை அடுத்து வரும் ஞாயிற்று கிழமை இரவு    கும்பம் வைத்தலுடன் சடங்கு உற்சவம் ஆரம்பமாகும்.     திங்கட்கிழமை சடங்குகள்    அம்மன் அடியார்களால் செய்யப்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி சனி    ஆகிய தினங்களில் இடம்பெறும் சடங்கு உற்சவங்கள் 5 குறிச்சிகளின் பொது   மக்களால் விமர்சையாக அன்னைக்கு சடங்கு பூஜைகள் செய்யப்படும். இதில்    செவ்வாய் கிழமை கண்ணகி தாயாரிடம் செல்லும் வைபவமும்,     வெள்ளிக்கிழமை   பலிச்சடங்கு வைபவமும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. ஞாயிறு, திங்கள் ஆகிய    இரு தினங்கள் பொதுச்சடங்குகளாக நடைபெறும். இதில் ஞாயிற்றுக்கிழமை  மடிப்பிச்சை எடுத்தல், நெல் குற்றல் என்பன மிக பய பக்தியுடன் அடியார்களால்    செய்யப்படும். திங்கட்கிழமை அன்னை பேச்சிக்கு பள்ளய வைபவமும் திருக்கும்பம்     சொரிதல் வைபவமும் பக்தி உணர்வு பூர்வமாக இடம்பெற்று ஆயிரக்கணக்கான    பக்தர்கள் அன்னையின் ஆசி பெற்று செல்வார்கள். புதன் கிழமை வைரவர்    பூஜையுடன் உற்சவம் நிறைவு பெறும். இக்கால கட்டம் கல்லடி உப்போடை     நொச்சிமுனை கிராமங்கள் ஆன்மீக மணம் நிறைந்ததாக காணப்படுவது     குறிப்பிடத்தக்கது.

அன்னை பேச்சித்தாயார் தனது குழந்தைகளின் கல்வி பொருளாதார மேம்பாட்டிற்காக   தனது அருட்கடாட்சத்தின் மூலம் 1909 ஆம் ஆண்டு கதிர்காமத்தம்பி உடையார்    சபாபதி பிள்ளை உடையார் ஆகியோர் மூலம் தற்போதைய விவேகானந்தா மகளிர்   கல்லூரியை ஸ்தாபிக்க வைத்தாள். 1925 ஆம் ஆண்டு தர்மகர்த்தா    K .O .வேலுப்பிள்ளை மூலம் சுவாமி விபுலானந்தரை அன்னையின் பிரதேசத்திற்கு   அழைத்து வந்து, சிவானந்தா தேசிய பாடசாலை ஆரம்ப கட்டடத்தை தர்மகர்த்தா   மூலம் அமைக்கவைத்து சுவாமி விபுலானந்தர் மூலம்  இராமகிருஸ்ண மிஸனுக்கு 1928  ஆம் ஆண்டு தனது வளாகத்தில் வைத்து கையளிக்க வைத்தாள். நாட்டின் பல   
கிராமங்களில் கல்விமான்கள் உருவாக அன்னையின் ஆசி உறுதுணையாக நின்றதை  நாம் என்றும் மனதில் வைக்கப்பட வேண்டியது. இச்சம்பவங்கள் மூலம் 1929 ஆம்       ஆண்டு ஆன்மீக வழிகாட்டலுக்கு தனது பிரதேசத்தில் இராமகிருஸ்ண மிஸனை   தோற்றம் பெற வைத்து, அவதார புருஷர் இராமகிருஸ்ண பரம ஹம்சரின் அருள்    ஆசியையும், மிஸன் தூய துறவிகளின் வருகைக்கு வித்திட்டு அவர்களின் பாதம்     இப்பிரதேசத்தில் பட்டு பிரதேசம் முழுவதும் ஆன்மீக ஆசிக்கும் அவர்கள் மூலமாகவே   கல்வி வழிகாட்டலுக்கும் வித்திட்டாள். எங்கள் பேச்சித்தாயாரின் கருணையையும்
சிறப்பையும் வார்த்தைகளுக்குள் உள்ளடக்க முடியாது. இலங்கையின் பல
பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அன்னையின் குழந்தைகள் அவளது    காலடிக்கு வந்து அருளாசி பெற்று செல்வது கண்கொள்ளா காட்சியாகும்.    எமது எதிர்கால சந்ததியினர் அன்னை பேச்சித்தாயாரின் சரித்திரத்தையும்   அற்புதத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் இக்கட்டுரை    அன்னையின்    ஆசியுடன் வெளியிடப்படுகின்றது.