வரதன்
அரச வைத்திய பீடங்களில் பட்டப்படிப்பை முடித்த பின்பு போதனா வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சியைப் பெற்று வெளியேறிய 31 வைத்தியர்களுக்கான நியமனம் வழங்கும் செயலமர்வு நேற்று (12) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் நடைபெற்றது.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த போது நகர மற்றும் கஷ்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முகங்கொடுக்கும் சுகாதார சீர்கேட்டை அவரிடம் முன்வைத்ததிற்கமைவாக சுகாதார அமைச்சினால் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் அதிகமாக உள்ளதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பௌதிகத் தன்மை, சுகாதாரப் பிரிவின் கீழ் உள்ள நகரப்புற வைத்தியசாலைகள் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகள் பற்றியும் மற்றும் அவற்றை அணுகுவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் செயலமர்வில் தெரிவிக்கப்பட்டன.
இதேவேளை இவற்றைத் தவிர்த்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரிவதற்காக வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.