40 இலட்சத்துக்கும் அதிகமானோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது யாருக்கு என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை.

 


இலங்கைத்தீவில் வாக்காளர்களில் சுமார் 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது யாருக்கு என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என  சிங்கள நாளிதழின் ஞாயிறு வார இதழில் செய்தி வெளியாகியுள்ளது.

அநேகமானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை வழங்கும் வேட்பாளரை இறுதி இரு வாரங்களிலேயே தீர்மானிப்பதாக அங்கு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிலவும் அரசியல் சூழல், வேட்பாளர்களின் பிரசித்தம், நாட்டை கட்டியெழுப்பக்கூடிய திறமை, கொள்கை போன்ற காரணங்கள் அனைத்தையும் பரிசீலித்து அதன் பின்னர் தாம் வாக்களிக்கும் வேட்பாளரை தெரிவு செய்வதாக குறித்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களுள் 30 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் தங்களுடைய முதலாவது வாக்கை வழங்க தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சுமார் 20 இலட்சமான இளைஞர்கள் வெளிநாடுகளில் வாழும் நிலையில் அவர்களுள் அதிகமானோருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்காது என தெரியவந்துள்ளது.