இஸ்ரேலிய தாக்குதல்களில் இது வரையில் 40,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

 


இஸ்ரேலிய தாக்குதல்களில் இது வரையில் 40,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 92,401 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்தோடு அதிகமானவர்கள் இஸ்ரேலின் தாக்குதல்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயுள்ளனர். காஸாவில் கொல்லப்பட்ட மொத்த எண்ணிக்கையில் (33 சதவீதம் )16,456 க்கும் அதிகமானோர் – குழந்தைகள் என்றும் (18.4 சதவீதம்) 11,088 பேர் பெண்கள் எனவும் 8.6 சதவீதம் பேர் வயதானவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 காஸாவில் கடந்த 10 மாதங்களாக நடைபெறும் போரில் கல்லறைகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் உயிரிழக்கும் தங்களின் அன்புக்குரியவர்களை அடக்கம் செய்ய இடமில்லாமல் தவித்து வருகின்றனர் பாலஸ்தீனியர்கள். அத்தோடு முடிந்தவரை கொல்லைப்புறங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள், உடைந்த கட்டிடங்களின் படிக்கட்டுகளுக்கு அடியில், சாலையோரங்களில் இறந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்கள் புதைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீன எழுத்தாளர் யூஸ்ரி அல்கோல் “காசாவின் தலைவிதி அதன் தெருக்கள், பூங்காக்கள் மற்றும் வீடுகளுடன் ஒரு பெரிய கல்லறையாக மாறுவது போல் தெரிகிறது, அங்கு உயிருடன் இருப்பவர்கள் தங்கள் முறைக்காகக் காத்திருக்கிறார்கள்” என்று எழுதியுள்ளார் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில், காஸா போர் நிறுத்த தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தோஹாவில் தொடங்கியுள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.