5 முனை தாக்குதலை வெற்றிகரமாக முறியடிப்போம் -இஸ்ரேல்

 


இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இன்று அல்லது அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் ஆதரவுடன் செயல்படும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் புவாட் ஷுகர் கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் இராணுவம் நடத்திய  ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்தார். இதற்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. இஸ்மாயில் ஹனியா, புவாட் ஷூகர் படுகொலையால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க உளவுத் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி இஸ்ரேல் மக்கள் முக்கிய மத நிகழ்வை அனுசரிக்க உள்ளனர். அன்றைய தினம் தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரேல் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வான்வழி தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ மற்றும் சி-டோம் அமைப்புகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

தோடு, இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படையின் ‘ஆபிரகாம் லிங்கன்’, ‘தியோடர் ரூஸ்வெல்ட்’ உள்ளிட்ட போர்க் கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் முகாமிட்டு உள்ளன. அமெரிக்க விமானப் படை சார்பில் கூடுதல் போர் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஈரான் ராணுவம், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமன் நாட்டின் ஹவுத்தி தீவிரவாதிகள், ஹமாஸ் தீவிரவாதிகள் ஒன்றிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நட்பு அரபு நாடுகள் மூலம் பலமுனை தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். குறிப்பாக 5 முனைகளில் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. எத்தகைய தாக்குதலையும் வெற்றிகரமாக முறியடிப்போம் என்று தெரிவித்துள்ளது.