ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் சென்றார். ஜூலை 31-ல் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார்.
விருந்தினராக வந்த இஸ்மாயிலை படுகொலை செய்ததற்காக, இஸ்ரேல் கடும் தண்டனை அனுபவிக்கும் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் இஸ்மாயில் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளிப்பது குற்றச்செயல்’’ என ஈரான் ராணுவம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில்,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போனில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், ‘‘அச்சுறுத்தலுக்கு எதிராக, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவும்’’ என தெரிவித்தார்.
இதையடுத்து அமெரிக்க கடற்படையில் உள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலை, ஓமன் வளைகுடா பகுதிக்கு செல்ல அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். ஓமன் வளைகுடா பகுதியில் ஏற்கெனவே யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட இதர போர்க்கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், போர் விமானங்கள் படைப்பிரிவு, ஏவுகணைகள் வீசும் போர்க்கப்பல்கள் ஆகியவற்றையும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு செல்ல அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, ‘‘ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் தெளிவாக அறிவித்துள்ளார். அவர்கள் இஸ்ரேல் மீது மற்றொரு தாக்குதல் நடத்த விரும்புகிறார்கள். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.