மட்டக்களப்பு - காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!


 


(கல்லடி செய்தியாளர்)

 

 



மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் இளைஞரொருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக தெரிவித்தார்.

காத்தான்குடிப் பிரதான வீதி மீரா பாலிகா மகளிர் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை தலைக்கவசமின்றி செலுத்தி வந்த இரு இளைஞர்கள் முன்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதுண்டதினால் இவ்விபத்துச சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சஹ்ரான் (வயது- 20) முஹம்மது சமல்கான் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். பின்னால் அமர்ந்து பயணம் செய்த இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் முன்னால் வந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவங்களால் மோட்டார் சைக்கிள்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மரணமானவரின் சடலம் காத்தான்குடி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.