மட்டக்களப்பு ஆயித்தியமலையில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!















 

 

 

(கல்லடி செய்தியாளர்)

 

 



 

மட்டக்களப்பு மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலைப் பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலையொன்று திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அதனைத் தடுத்து நிறுத்தக்கோரி அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (15) காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிலையில் மண்முனை மேற்குப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நான்கு மதுபானசாலைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது மதுபானசாலை காஞ்சிரங்குடாவில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில் இரண்டாவது மதுபானசாலை ஆயித்தியமலையில் திறப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் ஆயித்தியமலையில் குறித்த மதுபானசாலையைத் திறக்கக் கூடாது எனத் தெரிவித்து கல்வி அமைப்புக்கள்,விவசாய அமைப்புக்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மேற்குறிப்பிட்ட அமைப்புக்களால் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயத்திடம் கையளிக்கப்பட்டது.

மகஜரைப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் தெரிவித்ததாவது:-

என்னால் இதனைத் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கான அனுமதி மேல்மட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வருவேன் என்றார்.