FREELANCER
மட்டக்களப்பு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் USAID/SCORE நிறுவனத்தின் அணுசரனையில் Global Communities மற்றும் விமோச்சனா (மது மற்றும் போதை பொருள் புனர்வாழ்வு மையம்) ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பு தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வவுனதீவு பிரதேச செயலாளர், கிராம சேவகர்கள், போலீஸ் உத்தியோகத்தர்கள் , சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர்களும், சமய தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது வளவாளராக கலந்து கொண்ட சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் அவர்களால் தேசிய மட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலும் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கம் பற்றியும் போதை பொருளில் தங்கி வாழுகின்ற நிலைமையில் உள்ளவர்களை குற்றவாளிகளாகவோ, நோயாளிகளாகவோ அணுகாமல், அவர்கள் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான அவர்களின் கலாச்சார சமூக பின்னணிக்கு இசைவான பொருத்தமான புனர்வாழ்வு செயல்முறைகளை அளிப்பதன் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இந்தச் செயல்முறையில் விமோச்சனா இல்லத்தின் பங்களிப்பு சமூகத்தின் மீது ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கங்கள் பயனாளிகளின் வாழ்க்கைப் பயணத்தினூடாக பகிர்ந்துகொள்ளப்பட்டது.
விமோச்சனா இல்லத்தின் தொடர்ச்சியான பங்களிப்பினை உறுதி செய்வதற்கான எத்தனிப்பாக, அரசினால் வழங்கப்பட்டிருக்கின்ற காணியில் சகல வசதிகளுடனும் கூடிய, சுய நிறைவுடனான நிரந்தரமான புனர்வாழ்வு மையத்தினை, ஏனைய அரச, அரச சார்பற்ற பங்குதாரர்களுடன் கூட்டிணைந்த பங்களிப்புடன் உருவாக்கிக் கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.