விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் முரண்பாடுகளுக்கு உள்ளான சமூகங்களில் உள்ள சிறார்களின் உரிமைகளைப் பாதுகாத்தலும் ,மேம்படுத்தலும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் KNH நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் "இளந்தளிர்" எனும் வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று செங்கலடி மற்றும் கோறளைப்பற்று வடக்கு, வாகரை ஆகிய இரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிள்ளைகள் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அதற்கான தளம் ((Equality Club)) ஒன்றினை கடந்த 07.08.2024 அன்று வந்தாறுமூலை கிழக்கு 197 C எனும் கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேசசெயலாளரின் அனுமதியுடன் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டு அதன் செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட திட்டக் கிராமங்களான வந்தாறுமூலை எழுச்சிக்கிராமம், மாவடிவேம்பு, களுவன்கேணி 1,2 வந்தாறுமூலை, பலாச்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெற்றோர்கள் உட்பட சுமார் 100 பேரும், நிகழ்வின் பிரதம அதிதியாக ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் சார்பாக திரு யு.சு.ஆருசைத், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அவர்களும் வளவாளராக கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. தருமலிங்கம் அவர்களும், கிராம உத்தியோகத்தர் திரு உதயதேவா, விழுது நிறுவன திட்ட உத்தியோகத்தர் திருமதி பு.ஜீவிதா, சிரேஸ்ட சமூக வலுப்படுத்துனர் திருமதி சி.சுகிர்தவிழி, நிர்வாக அலுவலர் செல்வி க.நிர்மலா மற்றும் திட்டத்தின் கண்காணிப்பு ,மதிப்பீட்டு ஆலோசகர் திரு.வீ.குகதாசன் அவர்களும் விழுதினால் இலகு படுத்துனர்களான பயிற்றுவிக்கப்பட்ட இளையோர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். .
இந் நிகழ்வின் போது சிறுவர்களது உரிமைகளை மேம்படுத்துவதில் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை அறிந்து அதற்கேற்றாற் போல் அவர்களது ஆற்றலை விருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட அமர்வுகளின் மூலமாக அவர்கள் தங்களது குடும்பங்களில் பரிட்சயம் செய்த அனுபவங்களும்; பகிர்ந்து கொள்ளப்பட்டு பிள்ளைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக பிள்ளைகளுக்குள்ள உரிமை அடிப்படையில் பெற்றோர் தமது பொறுப்புக்களை எவ்வாறு ஒரு பொறுப்புள்ள பெற்றோராக மேற்கொள்ள வேண்டும், பாரதூரமான பிள்ளைப்பராய அனுபவங்களின் விளைவுகள் பற்றியும்,
அவர்களுடனான பிரத்தியேக குடும்ப நேரம் ஒதுக்குவது, வினைத்திறனான
வகையில் தொடர்புகளை மேற்கொள்வதன் மூலம் உருவாகும் நல்லுறவு,
பிணைப்பு என்பவை தொடர்பான முக்கியத்துவம் பற்றியும்
கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கிழக்குபல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் விழுதின் வளவாளருமாகிய திரு தருமலிங்கம் அவர்களினால் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் இயலுமையைக் கட்டியெழுப்பல் பயிற்சிக்கான தேவை மதிப்பீடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது..