ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், ஜனாதிபதியை சந்திப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டு மிக நீண்ட காலமாகியும் நீதி கிடைக்காத ஏராளமான தமது சக ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தைக் கோரும் கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் தமிழ் ஊடகவியலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கையளிக்கவிருந்தனர்.
ஆனால் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அந்த வாய்ப்பு ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரால் மறுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் கடிதம் கையளிப்பதை தடுத்தது மாத்திரமல்லாமல், வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்து வந்திருந்த ஊடகவியலாளர்கள் அந்த கூட்டத்தில் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, பல சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தமிழ் ஊடகவிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களால் ஜனாதிபதிக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க ஒரு விசேட பொறுப்புக்கூறல் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது.