வாழைச்சேனையில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்- ஆளுனர் நஸீர் அஹமட் பிரதம அதிதியாக பங்கேற்பு

 

 












 


ஹாபிஸ் நஸீர் அஹமட் மன்றத்தின் அனுசரணையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள மாஞ்சோலை, பதுரியா கிராமத்தில் ஆங்கில மொழிக் கற்கை மற்றும் தையல் பயிற்சிகளை நிறைவு செய்த மகளிருக்கான சான்றிதழ்கள்  வழங்கும் வைபவம் வியாழக்கிழமை (29) மாலை , பதுரியா கிராமத்தில் நடைபெற்றது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் சுற்றாடல் அமைச்சர் மற்றும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் தலைவருமான வட மேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் வாழைச்சேனை ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களில் ஒருவரான ஜவாத் டைலர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்

நிகழ்வின் வரவேற்பு உரையை தையூப் ஆசிரியர் நிகழ்த்தினார். அதன் போது, அல்ஹாஜ் நஸீர் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் தான் ஒரு முதலமைச்சருக்குரிய அதிகாரம் என்னவென்பதை கிழக்கு மாகாணம் மட்டுமன்றி முழு நாடும் உணர்ந்து கொள்ளும் வகையில் செயலாற்றினார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தொழில்வாய்ப்புகள், தொழிற்பயிற்சிகள் ஊடாக ஏராளம் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தற்போதைக்கு எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினையான காணிப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை வென்றெடுப்பதற்கான பொருத்தமான ஒரே அரசியல்வாதி கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் மாத்திரமே என்றும் தையூப் ஆசிரியர் தொடர்ந்தும் வலியுறுத்தினார்

அதனையடுத்து நிகழ்வின் ஏற்பாட்டாளரும், கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் வாழைச்சேனை ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களில் ஒருவருமான ஜவாத் டைலர் நிகழ்வு குறித்த சுருக்கமான அறிமுக உரையொன்றை நிகழ்த்தினார்

வாழைச்சேனை பிரதேசத்தில் மாத்திரமன்றி முழு மட்டக்களப்பு மாவட்டத்திலும் இளைஞர், யுவதிகளின் தொழிற்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் முனைப்புடன் செயற்படுகின்றார். வாழைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு சுமார் பத்து மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை ஜனாதிபதி ஊடாகப் பெற்றுக் கொடுத்துள்ளார். என்றைக்கும் பிரதேச மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதிலும், உரிமைகளை வென்றெடுப்பதில் சமரசமின்றி போராடுவதிலும் அல்ஹாஜ் நஸீர் அஹமட் அவர்கள் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி என்று ஜவாத் டைலர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதனையடுத்து ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான பிரபல பாடகர் சல்மான் வஹாப் ஆசிரியர் , தனது உரையில் அல்ஹாஜ் நஸீர் அஹமட் அவர்கள் ஒரு சுயநலமில்லாத தலைவர் என்று புகழாரம் சூட்டினார்

இதனையடுத்து உரைநிகழ்த்திய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் சுற்றாடல் அமைச்சரும், இந்நாள் வடமேல் மாகாண ஆளுனருமான கெளரவ நஸீர் அஹமட் அவர்கள், வட மேல் மாகாண ஆளுனர் பதவி என்பது புதிய மற்றும் விசித்திரமான அனுபவங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது

மட்டக்களப்பில் சுமார் ஒரு லட்சத்து இருபதினாயிரம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இங்கு காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களிலும் மிகக்குறுகிய நிலப்பரப்பிலுமே இந்த முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குருநாகல் மாவட்டத்திலும் அதேயளவான ஒரு இலட்சத்தி இருபதினாயிரம் அளவிலான முஸ்லிம்கள் வாழ்ந்த போதும், அங்கு 108 முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை அங்குள்ள மக்கள் எதிர்நோக்கவில்லை. அதே போன்று கடந்த காலங்களில் பல்வேறு வித்தியாசமான சூழ்நிலைகள் ஏற்பட்ட போதும், முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் நல்லுறவாகவே வாழ்ந்து வருகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் தற்போதைக்கு அந்த சூழ்நிலை இன்னும் வலுப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் முழு நாட்டிலும் இப்போது முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை ஒழித்த ஒரே அரசியல் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறுபான்மை சமூகங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்

கடந்த காலங்களில் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தவறுதலாக பழைய தூபியொன்றின் மீது செருப்புக் கால்களுடன் ஏறியதற்காக இனவாதம் பேசிய சஜித் பிரேமதாச ஆகட்டும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தீவிரவாதம் முஸ்லிம் பெண்களின் கருவறையில் வளர்வதாகவும், இஸ்லாமிய மதம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதன் காரணமாக அது இஸ்லாமிய தீவிரவாதம் என்றழைக்கப்படுவதாகவும் அனுரகுமார திசாநாயக்கவும் இனவாத வன்மங்களை கக்கியிருந்தனர். அவர்களை நம்பி ஏமாற முஸ்லிம்கள் தயாரில்லை.

அதே போன்று இன்றைக்கு முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எவ்வாறான உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்? எவ்வாறான உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்? உண்மையைச் சொல்வதாக இருந்தால் அவர்கள் அதிகாரத்தில் இருந்த காலங்களில் தான் முஸ்லிம்களின் உரிமைகள் பறிபோயுள்ளன.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் பலம்வாய்ந்த அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் இருந்த ஐந்து முஸ்லிம் கிராம சேவகர்பிரிவுகள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டது. அதன் காரணமாக இப்பிரதேச மக்கள் தங்கள் வாழ்விடங்களாக இருந்த ஏராளம் நிலப்பரப்பை இழந்துள்ளார்கள்.அதனை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு தங்களைத் தலைவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை

ஆனால் எனது வாழ்நாளுக்குள் குறைந்த பட்சம் இந்த மாவட்ட மக்களிடம் இருந்து பறிபோன உரிமைகளையேனும் மீட்டுக் கொடுக்க நான் முழுமூச்சுடன் செயற்படுவேன். இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் எதுவித சமரசமும் இன்றி எதிர்த்து நிற்பேன். கடந்த காலங்களில் நான் மேற்கொண்ட அவ்வாறான செயற்பாடுகள் காரணமாக அச்சம் கொண்ட ஏனைய இன அரசியல்வாதிகளின் துணையுடன் எனது நாடாளுமன்றப் பதவி சூழ்ச்சிகரமான முறையில் பறிக்கப்பட்டது. ஆனால் அதனை விட உயர்ந்த ஆளுனர் பதவி தற்போதைக்கு எனக்கு கிடைத்துள்ளது. எனவே எந்தவொரு சூழ்ச்சிக்கும் நான் அஞ்சவோ, பின்வாங்கவோ மாட்டேன். எனது மக்களின் உரிமைகளுக்காக என்றும் முன் நின்று போராடுவேன் என்றும் தெரிவித்தார்

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் தஸ்லீம், கௌரவ ஆளுனர் அல்ஹாஜ் நஸீர் அஹமட் அவர்களின் வாழைச்சேனை ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களில் ஒருவரான ஜவாத் டைலர்,  ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சல்மான் வஹாப் ஆசிரியர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான றஹீம் ஆசிரியர், காசிம் மௌலானா, சமூக சேவகர் நிஜாம், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வாழைச்சேனை பிரதேச ஊடகச் செயலாளர் எஸ்.ஐ.நிப்ராஸ், கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் சாஜித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்