தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ரணிலை ஆதரிக்காது. நாம் மூவர் ஜனாதிபதியை சந்தித்ததாக எம் மீது சேறு பூச முனைகிறார்கள். அத்துடன் ஜேவிபியினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடக்குக் கிழக்கை பிரித்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என செல்வம் அடைக்கநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் பொது வேட்பாளருக்கு உரிய ஆதரவுதளம் அதிகரித்து வருகின்றது. எமது மக்கள் எமது இலட்சிய பாதையிலே பொது வேட்பாளருக்கு கட்டாயம் வாக்களிப்பார்கள் என கருதுகிறேன்.
தமிழ் மக்களும் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளும் ஒர் அணியில் திரள வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாக இருக்கின்றது.
பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எமது தமிழ் சமூகம் ஒரு குடையின் கீழ் அணி திரண்டு இருக்கின்றது. இதனை செய்தியாக்க வேண்டும் என்பதுதான் நமது சங்கு சின்னத்தின் நோக்கமாக இருக்கின்றது என்றார்.