ரணிலின் வெற்றிக்காக 100 வீதம் உழைப்போம் செந்தில் தொண்டமான் நுவரெலியாவில் முழக்கம்-




1350 ரூபா சம்பளத்தை விமர்சிப்பவர்களால் 3 ரூபா சம்பள அதிகரிப்பை வாங்கிக்கொடுக்க முடியுமா என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியாவில் இடம்பெற்ற பிரமாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் இதன்போது கூறியதாவது,

2021, 2022ஆம் ஆண்டுகளில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த காலகட்டமாகும். யுத்தத்தின் போதுகூட இத்தகைய நெருங்கடிகளை இலங்கை எதிர்கொண்டிருக்கவில்லை. நாட்டை பாதுகாத்து முன்னோக்கிக் கொண்டுசெல்ல எவராவது வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஒருவரும் வரவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்று நாட்டை பொறுப்பேற்க வரவில்லை என்றால், இன்று எரிவாயுவின் விலை 20ஆயி்ரத்தை கடந்திருக்கும். அரிசியின் விலை 1000ம் ரூபாவையும் பெற்றோலின் விலை 3000ம் ரூபாவையும் கடந்திருக்கும்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றப்பின்னர் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் படிப்படியாக குறைந்தன. தற்போது நாடு இக்கட்டான நிலையை கடந்து பயணித்துகொண்டிருக்கும் தருணத்தில் அனைவரும் ஆட்சியை பொறுப்பேற்க முன்வருகின்றனர்.

நாட்டை மீட்டெடுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளும் பயணித்தால் நாடு முன்னோக்கி நகரும். அதைவிடுத்து ஏனையவர்களை நம்பி வாக்களித்தால் அவர்கள் அல்ல எரிபொருளுக்காகவும், அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளவும் வரிசையில் சென்று நிற்க போவதில்லை. நாம் தான் வரிசையில் சென்று நிற்க வேண்டும்.

இதற்கு இ.தொ.கா ஒருபோதும் இடமளிக்காது. அதனால்தான் இ.தொ.கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முடிவெடுத்தது.

சம்பளப் பிரச்சினையை பற்றியே அனைவரும் பேசுகின்றனர். 1350 ரூபா அடிப்படை சம்பளத்தை இ.தொ.கா பெற்றுக்கொடுத்துள்ளது. இதற்கான வர்த்தமானியும் வெளியாகிவிட்டது. எஞ்சியுள்ள 350 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பது இ.தொ.காவின் பொறுப்பு.

7 கிலோ அதிகமாக பறித்தால் 50 ரூபா வீதம் 350 ரூபாவை வழங்குவதாக கம்பனிகள் கூறியது. ஆனால், அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.  7 கிலோ பறித்தால் மேலதிகமாக 350 கிடைக்கும் என எமக்கு தெரியாதா? அல்லது 10 கிலோ அதிகமாக பறித்தால் 500 ரூபா கிடைக்கும் என எமக்குத் தெரியாதா?

நாம் கோருவது கம்பனிகள் ஊடாக எவ்வித நிபந்தனைகளுமின்றி 350 ரூபா அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே. தோட்டத் தொழிலாளர்களை பகடைக்காயாகப் பயன்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் காங்கிரஸ் கையெழுத்திடாது. அது தேர்தல் ஒப்பந்தமாக இருந்தாலும் சரி நாம் கையெழுத்திட மாட்டோம்.

மறைந்த தலைவர்களாக சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் எமக்கு கூறியது இ.தொ.காவின் இறுதி மூச்சு இருக்கும் வரை மலையக மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அதனால் காங்கிரஸை கேள்விக்கேட்கும் தகுதி எவருக்கும் இல்லை.

காங்கிரஸ் அனைத்துத் தொழிலாளர்களுக்கும்தான் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளது. விமர்சிப்பவர்களிடம் நாம் விடுக்கும் சவாலானது, முடிந்தால் உங்கள் தொழிற்சங்கத்தில் உள்ளவர்களுக்காவது 350 ரூபாவை பெற்றுக்கொடுங்கள். முடியாவிட்டால் 35 ரூபாவையேனும் பெற்றுக்கொடுங்கள். 3 ரூபாவைக்கூட வாங்கிக்கொடுக்க முடியாதவர்கள் எதற்கு தொழிற்சங்கங்களை நடத்துகின்றனர்?

350 ரூபாவால் ஒரு ரூபாவைகூட வாங்கிக் கொடுக்க முடியாதவர்கள் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் அறிக்கைகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். எஞ்சியுள்ள 350 ரூபாவை முடிந்தால் விமர்சிக்கும் நீங்கள் வாங்கிக்கொடுங்கள்.

காங்கிரஸை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் இலங்கையில் எந்தவொரு தொழிற்சங்கத்துக்கும் அதிகாரம் இல்லை என்பதுடன், தகுதியும் இல்லை. ஆகவே, எஞ்சியுள்ள 350 ரூபாவையும் காங்கிரஸ்தான் பெற்றுக்கொடுக்கும்.

லயன் அறைகளையும் அதனை சுற்றியுள்ள இடத்தையும் கிராமங்களாக அங்கீகரிக்குமாறு ஜனாதிபதியுடன் கோரியிருந்தோம். லயத்தில் ஒரு ஆண அடிக்கக்கூட எமக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறான ஒரு உரிமை அவசியமா? ஆகவே, எமது கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். லயத்தை சுற்றியுள்ள 10 ஏக்கர் காணியை கிராமங்களாக அங்கீகரிக்குமாறு கோரியுள்ளோம்.

ஜனாதிபதிக்கான ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இ.தொ.கா பின்வாங்குமா என அண்மைய நாட்களாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இ.தொ.கா ஒரு முடிவை எடுத்தால் அந்த முடிவில் இருந்து பின்வாங்காது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெற வைப்பதே இ.தொ.காவின் பிரதான கடமை. ஜனாதிபதியின் வெற்றிக்காக இ.தொ.கா 100 வீதம் உழைக்கும்.என்றார்.