வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வு- ஜனாதிபதி

 


வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகவியலாளர்களை  கொழும்பில் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுதல், நிதி வழங்குதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக   ரணில் விக்கிரமசிங்க  கூறியுள்ளார்.

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறியும் நோக்கில் தொடர்ச்சியாகப் போராடிவரும் உறவினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பல்வேறு வழிமுறைகளில் ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்துத் தாம் கரிசனையை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ள நிலையில் ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.