ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்த்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு,
இரண்டு மாவீரர்களின் சகோதரியும், முன்னாள் போராளியுமான பெண்ணொருவர் பொதுச்சுடர் ஏற்றிவைத்தார்.
அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதே நேரம் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரத்தில் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.