தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் விநியோகித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய தலைமை ஆசிரியர், கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமத்திய மாகாண பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட அறிக்கையில் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை அங்கீகரித்து மாகாணக் கல்விச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் வெளியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால் மீண்டும் பரீட்சையை நடாத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக இறுதி தீர்மானம் வரும் வரையில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,7879 மாணவர்கள் 2849 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர்.

ஆனால், ஆனால், பரீட்சை வினாத்தாள் கசிந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதன் பின்னணியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரீட்சை திணைக்களம் உட்பட பல பகுதிகளில் தமது பிள்ளைகளுக்கு நீதி கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.