சூடான கரண்டியைக் கொண்டு தனது 5 வயது மகளின் உடலில் சூடு வைத்ததாக தெரிவிக்கப்படும் தாயொருவரை கண்டி பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த தாயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து, ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் வாசனா நவரத்ன உத்தரவிட்டார்.
சிறுமியின் உடலில் எரிந்த காயங்கள் சுமார் இரண்டு அங்குல அளவில் காணப்பட்டதாகவும், மேலும், சிறுமியின் உடல் முழுவதும் அதிக அளவில் தழும்புகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மகள் முன்பள்ளிக்கு செல்ல மறுத்த காரணத்தினால் தாய் இவ்வாறு செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
தீக்காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்தியரிடம் அனுப்பி அறிக்கையைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சூடான எண்ணெயை மகளின் உடலில் பட்டதாலேயே அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிறிமியின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்தார்.
மகள் உடலில் சூடு வைத்த மனைவிக்காக கணவன் இரண்டு சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியம் அளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான பெண் கண்டி நாகஸ்தான பிரதேசத்தை சேர்ந்தவர்.
கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பேரில் பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.