வடமேற்கு நைஜீரியாவில் ஜம்ஃபாரா மாநிலத்தில் ஆற்றில் படகு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 64 பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
70 விவசாயிகளை ஏற்றிச் சென்ற மரப் படகு ஒன்று, சனிக்கிழமை காலை கும்மி நகருக்கு அருகில் சென்றபோது கவிழ்ந்தது. இதனையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைக்காக குடியிருப்பாளர்களை விரைவாகத் திரட்டினர்.
மேலும் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, ஆறு உயிர் பிழைத்தவர்கள் மீட்கப்பட்டிருந்தனர். மீட்புப் பணிகளுக்கு தலைமை தாங்கிய உள்ளூர் நிர்வாகி அமினு நுஹு ஃபலாலே கூறுகையில், “கும்மி உள்ளாட்சிப் பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறையாகும் என்றார்.
மேலும் உயிர் பிழைத்தவர்களை மீட்க கூடும் என்ற நம்பிக்கையில் அவசரகால குழுக்கள் தேடுதலை தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.900க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை அணுகுவதற்கு தினமும் ஆற்றைக் கடப்பதை நம்பியுள்ளனர்.ஆனால் இரண்டு படகுகள் மட்டுமே கிடைக்கின்றன,இது பெரும்பாலும் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது என்று உள்ளூர் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
கனிம வளங்களைக் கட்டுப்படுத்தக் கோரும் குற்றவாளி கும்பல்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஜம்ஃபாரா மாநிலம் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, வெள்ளத்தால் 10,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.