‘ஒரு இலட்சம் பேர் காணாமல் போனதாக யார் சொன்னது’- வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடும் சீற்றம்.

 


2000 ஆண்டு முதல் 2009 வரையில் தங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதாக  6047 பேர்மாத்திரமே  முறைப்பாடு செய்துள்ளனர் எனத் தெரிவித்த  இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ‘ஒரு இலட்சம் பேர் காணாமல் போனதாக யார் சொன்னது’ என்று சர்வதேச ஊடகமொன்றின் கேள்விக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் மக்கள் நீதிக்காக காத்திருக்கின்றனர் ஒரு இலட்சம் பேர் வரை- அவர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என ஜேர்மனியின் டிடபில்யூவின் செய்தியாளரின் கேள்விக்கு சீற்றத்துடன் பதிலளித்துள்ள அலி சப்ரி உங்களிற்கு எவ்வாறு இந்த எண்ணிக்கை கிடைத்தது. யார் இதனை சொன்னது? இது வெறும் குப்பைமேற்குலகின் முட்டாள்தனம் எனக் கண்டித்துள்ளார்.

கடந்த 30 வருடத்திற்கும் மேலாக வடக்கு கிழக்கில் இலங்கை அரசால் நடத்தப்பட்ட நில அபகரிப்பு மற்றும் ,   அரச படைகள், மற்றும் அரச ஆயுதக்குழுக்களால் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற போரில் சரணடைந்த, அல்லது கைது செய்யப்பட்ட, இராணுவத்தின் அறிவுறுத்தலுக்கமைய உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஒரு இலட்சத்துக்கும்  மேற்பட்டவர்கள் எனக்கூறப்படுகின்றது.  இது தொடர்பில் தமது உறவுகளை மீள் ஒப்படைக்க வலியுறுத்தி கடந்த 15 வருடங்களாக பெற்றோர் ,உறவினர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இது வரையில் அவர்களின் கேள்விகளுக்கு இலங்கை அரசு முறையான பதிலை அளிக்கவில்லை. அதனால் அவர்கள் சர்வதேசத்தின் உதவியைக்கோரி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச ஊடகமொன்றின் கேள்விக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தனது சீற்றத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.