இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட, தொழில்நுட்ப வளாகம் வெள்ளிக்கிழமை (20) காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் அயராத முயற்சியின் காரணமாக, The Gate Institute பூரண அனுசரனையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப வளாக திறப்பு விழாவில், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த பிரதம விருந்தினராகவும், உபவேந்தர் மற்றும் பணிப்பாளர்களுக்கான குழுவின் தலைவரும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் சஞ்ஜீவனி கினிகத்தர மற்றும் இலங்கை வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும், சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ. முரளிதரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இப்பல்கலைகழக வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பேசப்படும் இத்தொழில்நுட்ப வளாகமானது, பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமைவதுடன், இது புதிய தொழில் முனைவோர்களுக்கும், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குகின்ற மையமாக அமைய உள்ளது. அத்துடன் இவர்களுக்கான தொழில்நுட்ப உதவிகளையும், தொழில் முனைவோர்களுக்கான சந்தை வாய்ப்பை பெறுவதற்கான ஆலோசனைகளையும், சந்தைக்கான வலையமைப்புக்களை ஏற்படுத்துவதற்கான ஒரு மையமாகவும் செயற்படவிருக்கின்றது.
The Gate Institute அணுசரணையில் நிர்மானிக்கப்பட்டுள்ள இவ்வளாகத்தை, எதிர்காலத்திலும் விருத்தி செய்வதில் இந்நிறுவனம் இணைந்து பணியாற்றவுள்ளதுடன், கிழக்குப் பல்கலைகழகத்துடன் இணைந்து கிழக்கு மாகாண தொழிநுட்பத் துறை வளர்ச்சியில் பாரிய பங்களிப்பினை வழங்கவும் தயாராகி வருகின்றது.
ஒரு பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திற்கான பிரதான காரணியாக அமைவது, அப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள பிராந்திய சமூகத்தின், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும், அறிவு சார்ந்த விடயங்களில் பங்களிப்புச் செய்வதுமாகும். அந்த வகையில் கிழக்குப் பல்கலைகழகம் இப்பிராந்திய மக்களுக்கு சேவை வழங்குகின்ற ஒரு சமூக நிறுவனமாக தொடர்ந்தும் செயற்படுவதில் மகிழ்வடைகிறது. இப்புதிய முயற்சியில் பங்களிப்புச் செய்யக்கூடிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூக நிறுவனங்களை இணைந்து பணியாற்றுமாறும் கிழக்குப் பல்கலைக்கழகம் அழைப்பு விடுக்கின்றது.