மாவை சோனாதிராஜா , சுமந்திரன் இருவரையும் தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது.

 


பொதுத் தேர்தல் ஒன்றை தமிழ் இனம் சார்ந்து தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளுகின்ற இந்த நேரத்தில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான சில உணர்வுகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது ஒரு ஊடகமாக எமது கடமையாக இருக்கின்றது.

  1. தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், தமிழ் தரப்பு பலமான பிரதிநிதித்துவத்தை அந்த நாடாளுமன்றத்தில் பெறுவது என்பது தமிழ் மக்களின் இருப்புக்கு பெரிதும் இன்றியமையாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ⁠
  2. ⁠ஊழலற்ற, மாற்றத்திற்கான ஒரு அலை இலங்கை முழுவதும் படுவேகமாக வீச ஆரம்பித்துள்ள இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியும்- ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் களத்தில் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
  3. ⁠தமிழ் மக்களின் அபிலாசைகளையும், நிலைப்பாடுகளையும் பிரதிபலிக்காத வரலாற்றைக்கொண்ட முன்நாள் பிரதிநிதிகளை இம்முறை நிச்சயமாக தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகின்றார்கள்.
  4. குறிப்பாக சுமந்திரன் போன்ற தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கட்சியையும், தமிழ் மக்களையும் மையப்படுத்திச் செய்த பல காரியங்கள் தமிழ் மக்களின் அரசியல் நீரோட்டத்தில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவருவதாக மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றார்கள்.  
  5. ⁠தமிழ் மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருவது, தமிழ் மக்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் தமிழ் மக்களை குற்றவாளிகளாக உலகிற்குக் காண்பிப்பது, தென்னிலங்கை மற்றும் சில தூதராலயங்களின் ‘தரகராக’ செயற்படுகின்ற நடவடிக்கைகள்..- இப்படி அவர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்ற பல காரியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது.
  6. அதேபோன்று, ‘பார் லைசன்ஸ்’ உட்பட பல்வேறு தனிப்பட்ட சலுகைகளுக்காக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீதும் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்துவருகின்றார்கள்.
  7. எந்தவிதக் கொள்கையோ, தர்மமோ இல்லாமல் மூன்று வெவ்வேறு கொள்கைகளையுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு, வெட்கமே இல்லாமல் அதனை ஊடகங்களின் முன்பும் கூறிய மாவை சோனாதிராஜா மீதும் மிகுந்த வெறுப்போடு தமிழ் மக்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.
  8. எனவே மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கின்ற இதுபோன்ற தலைவர்களை தமிழரசுக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.
  9.  ⁠ஊழல்பேர்வழிகளையும், தரகர்களையும், உளறுவாயர்களையும் விட்டுவிட்டு, கல்வி அறிவுள்ள, பண்புள்ள, துடிப்புள்ள, தேசியப் பற்றுள்ள இளைஞர்களுக்கு தமிழரசுக்கட்சி இம்முறை வாய்ப்பளித்து களமிறக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
  10. அப்படியல்லாமல் புதிய மொந்தையில் பழைய கள்ளையே ஊற்றுவோம் என்று வளமை போலவே அடம்பிடித்தால், தமிழரசுக் கட்சி பாதகமான ஒரு மக்கள் ஆணையை களத்தில் சந்திக்கவேண்டி ஏற்படும்