இலங்கையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகப் பல தசாப்தகாலமாகக் காத்திருக்கிறார்கள்.




வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரெஞ்சினால்  வெளியிடப்பட்ட அறிக்கையில்

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் இவ்வேளையில், இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்துவதும், அவற்றால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை உறுதிசெய்வதும் மிக அவசியம் என்பதை நினைவுறுத்துகின்றோம். அதேபோன்று சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழான குற்றமான வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெறுவதற்கோ அல்லது அதனை சகித்துக்கொள்வதற்கோ இனி இடமில்லை என்ற உறுதியை இந்நாளில் மீளப்புதுப்பித்துக்கொள்வோம்.

இலங்கையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகப் பல தசாப்தகாலமாகக் காத்திருக்கிறார்கள். வலிந்து காணாமலாக்குதல் என்பது பல்வேறு மனித உரிமைகளை மீறத்தக்க மிகமோசமான குற்றச்செயலாகும். அதன்மூலம் ஏற்படக்கூடிய துன்பம் மற்றும் பாதிப்பு என்பன பல அடுக்குகளைக் கொணடதாக இருக்கிறது.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் தோற்றுவிக்கப்படும் பாதுகாப்பற்ற உணர்வு காணாமலாக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக அது அவர்களது ஒட்டுமொத்த சமூகத்தையும் கூட்டாகப் பாதிக்கும். தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு பாதிக்கப்பட்ட தரப்பினரின் துன்பத்தையும், ஆற்றாமையையும் மேலும் அதிகப்படுத்துகின்றது.

 வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த விடயத்தில் கடந்த சில தசாப்தங்களாக இலங்கை முன்னேற்றகரமான நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றது. வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் கையெழுத்திடல், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தல் என்பன அதில் உள்ளடங்குகின்றன.

எது எவ்வாறிருப்பினும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல நகர்வுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. காணாமல்போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், உண்மையைக் கண்டறிவதற்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதற்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்களை செயற்திறன்மிக்கவகையில் பயன்படுத்தவேண்டும்.

முல்லைத்தீவில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் கடந்த ஜுலை மாதம் முழுமையாகப் பூர்த்திசெய்யப்பட்டன. இலங்கையில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் முழுமையாக அகழ்வுப்பணிகள் பூர்த்திசெய்யப்பட்ட முதலாவது மனிதப்புதைகுழி இதுவாகும். அதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான பதில்களை வழங்கக்கூடியவகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நாம் நம்புகின்றோம்.

முல்லைத்தீவு மனிதப்புதைகுழி விவகாரத்தில் அடையப்படக்கூடிய குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம், பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.