முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் பராமரிப்புக்காக மூன்று வருடங்களில் (2022-2024) சுமார் 27 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
இவர்களின் பராமரிப்புக்காக கடந்த 2022ம் ஆண்டு செலவிடப்பட்ட தொகை ஏழு கோடி ரூபாய். 2023-ம் ஆண்டு எட்டு கோடிக்கும் அதிகமாகவும், இந்த ஆண்டு 11 கோடிக்கும் அதிகமாக அந்த தொகை வளர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் அளவு சுமார் 45 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாகவும் பேராசிரியர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு இவ்வருடம் ஒரு கோடியே ஐம்பத்தாறு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு தலா இரண்டு கோடியே தொண்ணூற்றொரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவை ஒதுக்கியதாக கூறும் பேராசிரியர், இந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு இருபத்தி எட்டு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 273 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகக் கூறும் அத்துகோரள, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ஐம்பத்து நான்கு வீதமும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையானது 329 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது.