மனிதவுரிமை ஆணைக்குழு தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் .

 


தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் முகமாக கள பணிகளில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் அலுவலகர்கள் ஈடுபடவுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, “ஜனாதிபதி தேர்தல் – 2024” கண்காணிப்பு நடவடிக்கையை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின்  அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கும், தேவை ஏற்படின் குறித்த இடத்திற்கு களவிஜயம் மேற்கொள்வதற்கும் ஆணைக்குழுவின் அலுவலர்கள் கடமையிலிருப்பார்கள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகமும் எதிர்வரும் 21 ஆம் திகதி தேர்தல் கண்காணிப்பு கடமைகளுக்காக திறந்திருக்கும் என்பதுடன், வாக்காளர்கள் தமது வாக்குரிமையினை பயன்படுத்துவதில் ஏதேனும் உரிமை மீறலை எதிர்கொண்டால்  021-2222021 மற்றும் 070-3654910 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.