மனித உரிமை விவகாரத்தில் இலங்கை பிரிட்டனிற்கு தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய நாடாக காணப்படுகின்றது

 

 


 

யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையர்களிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படுமா என்பது குறித்து பிரித்தானியா கருத்து தெரிவித்துள்ளது.

யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையர்களிற்கு எதிரான, எதிர்கால தடைகள் குறித்த ஊகங்களை வெளியிடுவது பொருத்தமற்ற விடயம், ஏனென்றால் தடைகளினால் ஏற்படக்கூடிய தாக்கத்தினை அது குறைக்கலாம் என பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய, அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.

 இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான  தடைகளின் தாக்கம் குறித்த எழுத்துமூல கேள்விக்கே அவர் இவ்வாறு  பதில் அளித்துள்ளார்.

மனித உரிமை விவகாரத்தில் இலங்கை பிரிட்டனிற்கு தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய நாடாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் கதெரின் வெஸ்ட் ,உண்மை நீதி பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையுடன் ஈடுபாட்டை பேணுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமை தடைகள் என்பது பிரிட்டனின் வெளிவிவகார கொள்கையின் முக்கியமான ஒரு சாதனம் என தெரிவித்துள்ள அவர் பரந்துபட்ட வெளிவிவகார கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியம் என கருதப்படும் தருணத்தில் தடைகளை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.