எம்மைப்பற்றிய பல அவதூறுகளையும் பொய்களையும் கூறியிருக்கிறார், ஹிஸ்புல்லாவின் மண்டையை பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.

 


நீண்ட காலமாக இந்த ஆட்சியாளர்கள் எமது நாட்டை ஆட்சிசெய்தார்கள். நாடும் மக்களும்   வறுமையின் அடிமட்டத்திற்கே வீழ்ந்தது. ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பப்பட்டார்கள், நாடு வீழ்ந்தது. நாங்கள் செப்டெம்பர் 21 ஆந் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கமொன்றை அமைப்போம் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

 "நாடு அநுரவோடு" தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம்  - சாய்ந்தமருதில், வௌ்ளிக்கிழமை (13) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்வோம். இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின்  வெற்றி நிச்சயம். தெற்கில் வசிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம்  மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து இருக்கிறார்கள். சாய்ந்தமருதுவில் வசிக்கின்ற முஸ்லிம்  மக்களின் தீர்மானம் என்ன?  நீங்கள் உரத்தகுரலில் கூறுவதுபோல் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பது உறுதியானது.
    
உங்கள் கலாச்சார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு.
  
எமது வெற்றியை தடுப்பதற்காக இன்று பல்வேறு தரப்பினர்கள் எமக்கு எதிரான சேறுபூசுதல்களிலும் பொய்யான  தகவல்களை பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளார்கள். அண்மையில் ஹிஸ்புல்லா இங்கு வந்தாரா? அவர் வந்து எம்மைப்பற்றிய பல அவதூறுகளையும் பொய்களையும் கூறியிருக்கிறார். முஸ்லிம்  மக்கள் மதரீதியாக கொண்டாடுகின்ற இரண்டு தருணங்கள் இருக்கின்றன.  ஒன்று றமழான் வைபவம்.  அடுத்தது ஹஜ்ஜி வைபவம். நாங்கள் வந்ததும் இதில் ஒன்றை நிறுத்துவோமென ஹிஸ்புல்லா கூறியுள்ளார். அவருடைய மண்டையை பரிசோதித்துப் பார்க்கவேண்டும். 

மக்களை பள்ளிவாசலுக்குப்போக அனுமதிக்கமாட்டோமெனவும் கூறியுள்ளார். இவர்கள் முஸ்லிம்  மக்கள் மத்தியில் வந்து அவ்வாறான கதைகளைக் கூறுகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க நாங்கள் அதிகாரத்திற்கு வந்ததும் கண்டி பெரஹெராவை நடாத்த விடமாட்டோம் என்று கூறுகிறார். அவர்களின் மேடைகளில் ஏறுகின்ற ஒருசில பிக்குமார்கள் நாங்கள் வந்தால் தானம் கிடைக்கமாட்டாதெனக் கூறுகிறார்கள். இவை அரசியல் கதைகளா? அவை அரசியல் விமர்சனங்களா?   அவை குறைகூறல்கள். அவைதான் பொய்கள். உண்மையாகவே மதம் பற்றிய கௌரவம் இருக்குமானால், மதம் சம்பந்தமான சுதந்திரத்தை உண்மையாகவே எதிர்பார்ப்பின் அவற்றை அரசியல் மேடைகளில் கூறக்கூடாது  என்றார்.