ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளிப்பு இன்றும் (05) இடம்பெறவுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இன்றும் நாளையும் (06) முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் நேற்று வாக்களிக்க முடியாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நாளை(06) தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்காளர்கள் உரிய திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், போலியான தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சிலர் பரப்புவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.