வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது

 


முல்லைத்தீவில் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு வாக்குச் சீட்டை  ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அதிபர்  ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை  நேற்று(07) இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் கடந்த 04,05,06 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது

இவ்வாறு  நேற்று முன்தினம் (06) முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் வாக்களிக்கத்தயார் செய்யப்பட்ட   ஆறு வாக்கெடுப்பு நிலையங்களில் முதலாவது வாக்கெடுப்பு நிலையத்துக்கு பொறுப்பாக இருந்த  புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் அதிபர்( வயது 56)  தனது வாக்கை அளிப்பதற்க்காக  வாக்குச்சீட்டைப் புள்ளடியிட்ட பின்னர் தனது  கைத்தொலைபேசி மூலம் ஒளிப்படம் எடுத்துள்ளார்.

இதனை அவதானித்த  தேர்தல் கடமையில் இருந்த குறித்த நிலையத்துக்கு பொறுப்பான ARO  மேற்படி விடயமாக முல்லைத்தீவு  தேர்தல்கள் அலுவலகத்துக்கு  தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வந்த தேர்தல் திணைக்கள அதிகாரிகள் குறித்த அதிபரின் தொலைபேசியை பெற்றுக்கொண்டதோடு  மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு நேற்று (07) குறித்த விடயத்தை முல்லைத்தீவு பொலிசாரிடம் பாரப்படுத்தினர் .

இந்நிலையில் நேற்று (07) குறித்த அதிபரை  கைது செய்த முல்லைத்தீவு பொலிசார் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.