இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை 2025 ஜனவரி 15 ஆம் திகதி இலங்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

 


மிருசுவில் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை 2025 ஜனவரி 15 ஆம் திகதி இலங்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 2020ஆம் ஆண்டு முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை எதிர்த்தும், அந்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மிருசுவில் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் அம்பிகா சற்குணநாதன் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2000 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி மிருசுவில் கிராமத்தில் தங்களுடைய சொத்துக்களை பரிசோதிப்பதற்காக திரும்பி வந்த ​​உள்நாட்டில் இடம்பெயர்ந்த எட்டு அகதிகளை கொலை செய்து யாழ்ப்பாணத்திலிருந்து 16 மைல் தொலைவிலுள்ள புதைகுழியில் அவர்களின் சடலங்களைப் புதைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 5 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், சுனில் ரத்நாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், ஏனைய 4 இராணுவத்தினர் குறித்த போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.