சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை நடைபெற்ற நிலையில் சிறுவர்கள் பங்குகொண்ட கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு இறுதி யுத்ததின்போது ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான நீதி கோரி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ்தான் பதில் என்றால் கொலைசெய்தவன் யார்?, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே இறந்துகொண்டு இருக்கின்றோம், கையளிக்கப்பட்ட சகோதரங்கள் எங்கே? என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.
அதேபோல் வவுனியாவிலும் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் எத்தனையோ சிறுவர் அமைப்புக்கள் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட எமது குழந்தைகளுக்கான நீதிப்பொறிமுறையினை ஒருவரும் ஏற்ப்படுத்தி தரவில்லை. எனவே நாம் சர்வதேச நீதிகோரி எமது போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். இந்நிலையில் எமது போராட்டங்களை குழப்பும் விதமாக சில விசமிகள் திட்டமிட்டு செயற்ப்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர். இருப்பினும் எமக்கான நீதி கிடைக்கும்வரை நாம் இந்த போராட்டங்களை கைவிடப்போவதில்லை என்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்குழந்தைகள் பயங்கரவாதிகளா,சிறுவர்தினம் நீதி தேடும் தினம், பச்சிளம் குழந்தைகள் ஆயுதம் ஏந்தினரா போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பியிருந்தனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் ஐஓஎம் அலுவலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை போராட்டம் நடைபெற்றது.
இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.