100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை- இலங்கை மத்திய வங்கி

 

புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை வழங்குவது ஒரு சாதாரண மத்திய வங்கி நடவடிக்கையாகும். வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க திறந்த சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை பணம் அச்சிடல் என்று பதிவு செய்திட முடியாது.

இதனூடாக, அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக பணம் அச்சிடல் அல்லது முறையற்ற பண விநியோகம் முற்றிலும் இடம்பெறவில்லை. இங்கு நடந்திருப்பது மத்திய வங்கியின் விலை ஸ்திரத்தன்மையின் நோக்கங்களை அடைவதற்கான ஒரு சாதாரண செயற்பாடாகும்.