இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 35,000 முதல் 40,000 வரை புதிதாக புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

 

 

 



 

 நாட்டில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோயும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் அறிக்கைகளுக்கு அமைவாக, இரத்தப் புற்றுநோய், நிணநீர்க் குழாய் தொடர்பான புற்றுநோய், மூளை தொடர்பான புற்றுநோய், எலும்பு தொடர்பான புற்றுநோய் போன்றன குழந்தகைளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உலகில் புற்றுநோய் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.

சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 35,000 முதல் 40,000 வரை புதிதாக புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இலங்கையில் புற்றுநோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு சராசரியாக 19,000 இற்கும் அதிகமாக உள்ளது.

பெண்களிடையே மார்பக புற்றுநோயின் அபாயம் வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு (2023) பதிவான பெண் புற்றுநோய்களில் 26% வீதமானவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளமை தெரியவருகிறது.

ஆண்களிடையே அதிகளவாக வாய் புற்றுநோய் ஏற்பட்டுள்ளமை அறியமுடிகிறது.

2023 இல் ஆண்களுக்கு ஏற்பட்ட புற்றுநோய்களில் 12.6% வீதமானவை வாய்ப் புற்றுநோயாகும்.

நாட்டில் ஒரு வருடத்தில் சுமார் 1,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், 2021 ஆம் ஆண்டில், லுகேமியா, நிணநீர் குழியங்கள் தொடர்பான புற்றுநோய், மூளை தொடர்பான புற்றுநோய் மற்றும் எலும்பு தொடர்பான புற்றுநோய் உள்ளிட்ட குழந்தை பருவ புற்றுநோயின் 1,032 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.