மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 5000 லீற்றர் கசிப்பு போதைப்பொருளுடன் 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின்கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ,தாழங்குடா, புதுக் குடியிருப்பு, நாவற்கூடா, கல்லடி உட்பட பல இடங்களில் இத்தடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள், கசப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டதோடு, 25 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதோடு காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.