ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன் - சிவஞானம் சிறீதரன்

 


 

 

தான்  இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள் எனவும் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்று  யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பலர் நான் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனக் கூறுகின்றார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்குப் பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால், நான் கடைசி வரை போராடுவேன். பகிரங்கமாகச் சொல்கின்றேன் ஒரேயொரு கட்சி அரசியல் அது இலங்கைத் தமிழரசுக் கட்சியே.

நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற போதும் வழக்கை எதிர்கொண்டு வருகின்றேன். எனது கட்சிக்காரர்களே நான் தலைவராகச் செயற்படக்கூடாது என வழக்குகளைத்  தாக்கல் செய்துள்ளார்கள். அத்தனை சவால்களையும் தாண்டி இந்தக் கட்சியில் இருக்கின்றேன் என்றார்.