ராஜபக்சர்களின் பணம் உலகில் எந்த நாட்டில் பதுக்கி வைத்திருந்தாலும் அவை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

 


ராஜபக்சர்களின் பணம் உகண்டாவில் அல்ல உலகில் எந்த நாட்டில் பதுக்கி வைத்திருந்தாலும் அவை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்  மேலும் கருத்து வெளியிடுகையில்,

உகண்டாவில் ராஜபக்சர்கள் பணத்தை பதுக்கி வைத்திருந்தால் அவற்றை நாட்டுக்கு கொண்டுவருமாறு நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். உகண்டா அல்ல உலகில் எந்த நாட்டில் ராஜபகசர்கள் பணத்தை பதுக்கிவைத்திருந்தாலும் அவற்றை மீட்டு வருவதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.

ரவி வைத்தியலங்காரவுடன் ‘டீல்’ செய்து மறைத்துவைக்கப்பட்ட ‘பைல்’ களை மீள எடுக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ச நினைக்கலாம். ஆனால், அவை குறித்தும் ராஜபக்சர்கள் செய்துள்ள ஊழல் – மோசடிகளுடன் தொடர்புடைய அனைத்து பையில்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

ராஜபக்சர்கள் நாடு முழுவதும் கொள்வனவு செய்துள்ள காணிகள், கம்பனிகளில் பெற்றுள்ள பங்குகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

உகண்டாவில் இருந்து தனியார் விமானங்களில் மூலம் ராஜபக்சர்களின் திருணங்களுக்கு நபர்கள் எவ்வாறு வந்துச் சென்றனர் என நாட்டு மக்களுக்குத் தெரியும்.

அதேபோன்று டுபாய், சீசெல்ஸ் மற்றும் சிங்கப்பூரில் உள்ள கணக்குகளில் அவர்களது பணம் இருப்பது குறித்து மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பார் லைசன்களை வழங்கியமை மற்றும் அவற்றுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி தொடர்பிலான தகவல்களும் கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளன.

ஹரின் பெர்ணான்டோ, சங்கீத விழாக்கள் என செலவு செய்துள்ள நிதி தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. மனுஷ நாயணக்கார, 700 மில்லியனுக்கும் அதிகமான நிதியை எவ்வித தரவுகளுமின்றி செலவு செய்துள்ளார். தொலைக்காட்சியில் விளம்பரம் செய்வதற்காக 200 மில்லியனுக்கும் அதிகமான நிதியையும் மனுஷ செலவு செய்துள்ளார்.

மக்களின் நிதியை மோசடி செய்தவர்கள் தொடர்பிலான உரிய நிறுவனங்களுக்கு தகவல்களை வழங்கியுள்ளோம். அவை தொடர்பிலான விசாரணைகளும் வரிசையாக ஆரம்பமாகியுள்ளன.” என்றார்.