மட்டு நகரான்
இலங்கையின் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் இலங்கையின் தென் பகுதிகளில் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலும் வேகமாக நடைபெற்றன.குறிப்பாக வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தமது வாக்கு அரசியலுக்கான போட்டிகளையும் வெட்டுக்குத்துகளையும் முன் னெடுத்த நிலையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்துசெயற்படும் கட்சிகள் இம்முறையும் தமது சொந்த நலனும் தமது கட்சிசார்ந்த நலன் மட்டுமே முன் நிறுத்தி, வேட்புமனுக்களை தாக்கல்செய்துள்ளது.
தமிழ் தேசிய கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்புசார்ந்த விடயங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் எதிர்காலத்தில் தமிழர்களின் இருப்புக்கு அச்சுறுத்த லாக அமைந்துவிடுமோ என்ற அச்ச நிலை இன்று தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப் பட்டுவந்த நிலையில் தற்போதைய நிலையில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படும் நிலையிருக்கின்றது.இம்முறை அது இரண்டாக குறையும் சாத்தியமும் காணப் படுகின்றது. தமிழ் தேசிய அரசியல் கட்சிக ளிடையே ஏற்பட்டுள்ள பிளவு இந்த தாக்கத்திற்கு காரணமாக அமைகின்றது.
கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரை யில் தமிழ் தேசிய அரசியல் என்பது பலமானதாக இருக்கவேண்டும்.இந்த நாட்டில் தமிழர்களின் நீண்டகால கோரிக்கைக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரையில் தமிழர்கள் அரசியல் ரீதியாக பலமாகயிருக்கவேண்டியது கட்டாயமாகும்.
இன்று வடகிழக்கில் காணப்படும் தமிழ் தேசிய அரசியலின் போக்கானது எதிர்காலத்தில் இலங்கையின் சிங்கள தேசிய கட்சிகளை நோக்கி தமிழ் மக்களை நகரவைக்கும் நிலைமையே காணப்படுகின்றது.இன்று வடகிழக்கில் ஏற் பட்டுள்ள ஜேவிபி அலையானது வடகிழக்கு தமிழ் மக்களுக்கு பாரிய ஆபத்தான விடயமாக மாற்றம்பெறும் நிலைமை காணப்படுகின்றது.
இன்று வடகிழக்கில் உள்ள கற்ற சமூகம் ஜேவிபி என்ற கட்சிதான் தமிழர்களுக்கு விமோசனம் தருவதுபோன்ற மனநிலையில் அதற்கு ஆதரவான அணிதிரட்டல்களை முன்னெடுத்து வருகின்றது.இது தமிழ் தேசிய அரசியல் சக்திகள் மீது நம்பிக்கையிழந்த நிலையிலேயே இன்று சிங்கள கட்சிகளை நோக்கி நகரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.இதற்கான பொறுப்பினை தமிழ் தேசிய அரசியல் சக்திகளேஏற்கவேண்டும்.இவ்வாறானவர்களை தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய சக்திகளுக்கு உள்ளது.ஆனால் அந்த சக்திகள் மீதும் இன்று தமிழ் மக்கள் நம்பிக்கையிழக்கும் நிலைமையே காணப்படுகின்றது.
குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய பொதுக்கட்ட மைப்பு தமிழ் மக்களுக்கான குரலாகவும் தமிழ் தேசிய அரசியலை ஒருங்கிணைத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் வடகிழக்கில் தமிழ் தேசிய அரசியலை நிலைநிறுத்து வதற்காகவும் தமிழர்களின் உரிமைக்காகவும் செயற்படும் என எண்ணியிருந்த நிலையில் இன்று அதன் செயற்பாடுகள் என்பது கேள்விக்குறியாகி நிற்கின்றன.
சங்கு சின்னமானது தமிழர்களையும் தமிழ் தேசியத்தினையும் ஒருங்கிணைக்கும் சின் னம் என்று கூறப்பட்டபோதிலும் இன்று கடந்த காலத்தில் ஒட்டுக்குழுக்களாக செயற்பட்டவர் களுக்கு வாக்கு பெற்றுக்கொடுக்கும் சின்னமாகவே நோக்கப்படுகின்றது.இதன்காரணமாக எதிர்காலத் தில் தமிழ் தேசிய அரசியலிலும் கட்டமைப்பு செயற்பாடுகளிலும் தமிழர்கள் நம்பிக்கையிழக்கும் நிலைமை காணப்படுகின்றது.
அதிலும் கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப் பினை வழிநடாத்திய இருவர் புளோட் கட்சி ஊடாக சங்கு சின்னத்தில் தேர்தலில் குதித்துள்ளமையானது எதிர்காலத்தில் தமிழர்களின் ஒற்றுமை தொடர்பில் சிந்திக்கும் தமிழர்களுக்கு பாரிய பின்னடைவாகவே நோக்கவேண்டியுள்ளது.
தமிழ் மக்கள் பொதுச் சபை சார்பில், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்களில் ஒருவரான அரசியல் பத்தியாளர் யதீந்திரா, புளொட்டின் சார்பில் இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் ‘வீட்டு’ச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர், 2015 பொதுத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில், கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டவர்.இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கையொப்பம் இட்ட வசந்தராஜா என்பவர் புளோட் ஊடாக சங்கு சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த காலத்தில் தமிழ் தேசிய அரசியலுக்கு எதிராக செயற்படும் வகையில் சுயேச்சை குழுக்களை உருவாக்கி வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்காற்றிவர்.
இவ்வாறான நிலையில் உள்ளவர்களைக் கொண்டு கிழக்கில் முன்னெடுக்கப்படும் தமிழ் தேசியம் சார்ந்த பணிகள் ஒருபோதும் வெற்றி யளிக்காது.இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய அரசியலை சிதைக்கும் நிலைக்கே கொண்டுசெல்லும்.இவ்வாறான நிலையில் கிழக்கில் தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவதற்கான செயற்
பாடுகளை இன்றைய காலத்தில் முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டு முடிந்த நிலையில் நிலையில் தமிழ் தேசிய அரசியலை கேள்விக்குட்படுத்தவும் வாக்கு சரிவினை ஏற்படுத்தவும் பல்வேறு சுயேச்சை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் பெருமள வான சிங்கள கட்சிகளும் தமது வேட்பு மனுக்களை தமிழர்கள் ஊடாக தாக்கல்செய்துவருகின்றது.
இன்று கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் வீட்டுச்சின்னமும் சங்கு சின்னமும் பலம்வாய்ந்த அணிகளாகவுள்ள நிலையில் மறுபுறத்தில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் ஓரளவு பலம் பெற்று நிற்கின்றது.இதேபோன்று சிங்கள அரசியல் கட்சிகளில் சிலவும் கணிசமான வாக்கு களை பிரிக்கும் நிலைக்குவந்திருக்கின்றது.இவ் வாறான நிலையில் தமிழ் தேசிய அரசியலை பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நிலையிலிருக்கின்றோம்.
தமிழர்கள் தமக்கான இருப்பினை பாது காக்கவேண்டுமானால் கிழக்கில் தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.வெறுமனே வாக்கு அரசியலைமட்டும் செய்து தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கும் செயற்பாடுகள் என்பது தமிழ் தேசிய அரசியலில் இருந்து தமிழர்களை தூரக்கொண்டுசெல்லும் நிலைமையினையே உரு வாக்கும்.இவ்வாறான நிலைமையினை கையாள வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய பற்றாளர்களுக்கு உள்ளபோதிலும் இன்று அவர்களும் கட்சி அரசியல்சார்ந்து செயற்படுவதன் காரணமாக தமிழ் தேசிய அரசியலை முறைப்படுத்தமுடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையினை உணர்ந்து தமிழ் தேசிய கட்சிகள் தமது தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.கடந்தகாலத்தில் தமிழ் தேசிய கட்சிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளும் வெட்டுக்குத்துகளுமே பிள்ளையான் போன்றவர் கள் வேரூன்ற காரணமாக அமைந்தது.அவ்வாறான நிலைமைகள் மேலும் வளர்ந்து ஒட்டுக்குழுக்களின் கைகளில் கிழக்குமாகாணம் சென்றுவிடாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய அரசியலில் பயணிக்கும் அனைவருக்கும் உள்ளது.இன்று கிழக்கில் பிரதான அரசியல் கட்சியாக இரண்டு தமிழ் தேசிய பரப்பும் பிரிந்து நின்றாலும் முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் இரு பிரிவுகளும் செயற்படும்போது தமிழ் மக்கள் தமிழ் தேசிய அரசியலில் நம்பிக்கைகொண்டு மீண்டுவரும் சந்தர்ப்பம் ஏற்படும்.அதனை முன் னெடுக்கவேண்டிய மிக கட்டாயமான நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.இதனை உணர்ந்து செயற்படவேண்டும் என்பதே எமது கோரிக்கை யாகவுள்ளது.