இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பது தொடர்பிலும் சுவீடன் அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக இலங்கைக்கான சுவீடன் தூதுவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஜேன் தெஸ்லெப் ஆகியோருக்கு இடையில் நேற்று (04) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சுவீடன் அரசாங்கத்தின் முதலீடுகளின் போது, முதன்மையாக இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையிலும், சுவீடன் அரசாங்கம் இலங்கையின் உணவுப் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துவதாகவும் சுவீடன் தூதுவர் தெரிவித்தார்.
சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் வீசா சிரமங்கள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுவீடன் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.