‘ஈரான் கட்டமைத்த பயங்கரவாத அச்சு சரிகிறது’ என்று ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு நடுவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் இராணுவம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.
கடந்த 27-ம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இந்நிலையில், இஸ்ரேல் இராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், காசாவில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (அக்.17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவர்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள வீடியோ செய்தியில், “ஈரான் கட்டமைத்த பயங்கரவாதத்தின் அச்சு சரிந்து வருகிறது. ஹெஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மோஷன், ஏற்கெனவே இஸ்மாயில் ஹனியாவும் கொல்லப்பட்டார். ஹமாஸ் இராணுவத் தலைவர் முகமது டெய்ஃபை வீழ்த்தோனொம். ஈரான் தனது சொந்த மக்கள் மீதும், அண்டை நாடுகளான ஈராக், சிரியா, லெபனான், ஏமன் மக்கள் மீது செலுத்தும் பயங்கரவாதத்தின் படியும் முழுமையாக விரைவில் முடிவுக்கு வரும். ஈரான் தலைமையிலான தீவிரவாத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவந்த மாறுபட்ட எதிர்காலத்தை உருவாக்க எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதன் மூலம் இந்தப் போரில் மிக முக்கிய இலக்கை நாங்கள் எட்டியுள்ளோம். மிகப் பெரிய யூத இனப் படுகொலைக்குப் பின்னர் எங்கள் மக்களின் மீது மோசமாக தாக்குதலை நடத்தியவரின் கணக்கைத் தீர்த்துள்ளோம்.
இருப்பினும் ஹமாஸ் மற்றும் ஈரான் ஏவிவிட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களின் போர் இன்னும் முடிவடையவில்லை. கடினமான நாட்கள் இன்னும் இருக்கின்றன. இறுதியில் நாங்கள் நிச்சயம் வெல்வோம்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பைடன் கருத்து: கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட யஹ்யா சின்வர் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள். டி.என்.ஏ., பரிசோதனை மூலம் சின்வர் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. ஹமாஸ் தலைவர்களை வேட்டையாட இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. சின்வர் கொல்லப்பட்டதை அறிந்து நெதன்யாகுவை தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். இந்தச் சம்பவத்தின் மூலம் உலகில் எங்கும் எந்த பயங்கரவாதியும், நீதியிலிருந்து தப்பிக்க முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.