பாராளுமன்ற தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச மற்றும் அரசியலமைப்பு சபை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தபால் மூல வாக்களிக்க விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது.
மேலும் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காமை அல்லது சில குறைபாடுகள் காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தேர்தல் கடமைகளில் இருந்து விலக்கு அளிக்க ஒரு காரணமாக அமையாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக தேர்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடமைகளுக்கு நியமிக்கப்படாதவர்கள் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் எனவும், அவ்வாறான அதிகாரிகள் தபால் மூல வாக்களிக்க விண்ணப்பிக்கக் கூடாது எனவும், அவ்வாறான விண்ணப்பங்களை சான்றளிக்கக் கூடாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, மேற்கண்ட அறிவுறுத்தல்களின்படி செயல்படத் தவறினால் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.