மட்டக்களப்பு கதிரவன் கலைக் கழகம் தென்னிந்திய சினிமாவில் தடம் பதிக்கிறது .


  

 





 




 








 






 








இலங்கை - மட்டக்களப்பு கதிரவன் கலைக் கழகம் 1976 ஆம் ஆண்டு முதல் கலை-  இலக்கியம்- பண்பாடு மற்றும் சமூக முன்னேற்றச் செயற்பாடுகளை முதன்மை அங்கமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

கல்வி முன்னேற்றப் பணிகள், கலை  ஆற்றுகைகள் மற்றும் இலக்கியச் செயற்பாடுகள் , சமூக முன்னேற்ற வாழ்வாதாரத் திட்டங்கள், சிறுவர்- பெண்கள் மற்றும் முதியோர் நலச் செயற்பாடுகள், சகல துறை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் முதலான பல்வேறு நற்பணிகளில் கதிரவன் கலைக் கழகம் தடம் பதித்துள்ளது.

இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் முன்னணி வகித்த கதிரவன் கலைக் கழகம்  இந்தியா- தமிழ்நாடு பல்கலைக் கழகம், கல்லூரிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தோறும் கடந்த மூன்றாம் மாதம் பட்டிமன்றங்கள் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

கதிரவன் கலைக்கழகம்  எனும் தலைமை அமைப்பின் ஊடாக கதிரவன் பட்டிமன்றப் பேரவை, கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம், கதிரவன் சிற்றிதழ், கதிரவன் கல்வி நிலையம் என செயல்படுகின்ற அதே வேளை Kathiravan tamil யூடியூப் சனல், முகநூல் பக்கம் ஊடாக பல்வேறு விழிப்புணர்வுக் காணொளிகளை பதிவேற்றம் செய்து உலக மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.  

மேற்படி கதிரவன் தமிழ் ஊடாகக் கிடைத்த உறவுகளின் பிரகாரம் தென்னிந்திய சினிமாவில் நடிப்பதற்காக Zone Way Production தயாரிப்பாளர் செல்வின் தாஸ் விடுத்த அழைப்பின் பிரகாரம் வருகை தந்து அக் காரியத்தினை நிறைவு செய்து தற்போது இரண்டு வாரங்களாக பல்கலைக்கழகம், கல்லூரி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தோறும்  பட்டிமன்றம், விழிப்புணர்வு நாடகங்கள் நிகழ்த்தி வருகின்றனர்.

இலங்கை - மட்டக்களப்பு மண்வாசனை சொற்களோடு, தமிழர்களின் கலை பண்பாடு மற்றும் கல்வி முன்னேற்ற விடயங்களை மையப் பொருளாகக் கொண்டு இவர்களின் பட்டிமன்றம் மற்றும் நாடகங்கள் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.