ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இன்று சிலருக்கு பயங்கரவாத தடுப்புபிரிவிலிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

 


அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது,  பொதுவேட்பாளருக்கு சார்பாக செயற்பட்ட ஒருவருக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர் எனமக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்

செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-;

இந்த ஆட்சியில் இருக்ககூடிய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என உறுதியளித்திருந்தது.

 இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இன்று சிலருக்கு பயங்கரவாத தடுப்புபிரிவிலிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

நண்பர் ஒருவர் இந்த முறை தமிழ்பொதுவேட்பாளராக களமிறங்கிய அரியநேந்திரனிற்கு சமூக வலைத்தளத்தில் பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்துகொண்டிந்தவர். அவ்வாறு பணம் செலுத்தி விளம்பரம் செய்யப்பட்டது ஒரு தீவிரவாத குற்றம் என வரையறை செய்வது போல தீவிரவாத தடுப்பு பிரிவினர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவருக்கு கடிதம் அனுப்பி முறைப்பாடு விசாரணையொன்றிற்கு அழைத்துள்ளனர்.

இந்த விசாரணை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இடம்பெற்றிருக்கின்றது, சர்வதேசத்திலிருந்து எப்படி பணம் யாரிடமிருந்து வந்தது போன்ற கேள்விகளை கேட்டுள்ளனர்.

 இளைஞர்கள் இந்த அரசியலிற்கு வருவதற்கு அரசியல் பேசுவதற்கு தங்களிற்கு எதிராக நிகழ்ந்துகொண்டிருக்கின்ற அடக்குமுறைக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு தயங்குவதற்கான ஒரு பிரதான காரணமாக பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகின்றது.எனவே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு,பயங்கரவாத தடுப்பு பிரிவு எங்களின் மேல் தொடர்ச்சியான அடக்குமுறைகளை பிரயோகிப்பது, கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம் என நான் இந்த அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றேன்.

இதேவேளை கிளிநொச்சியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரின் பெற்றோரிடம் விபரங்களை பெற்றுள்ளனர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ் மக்களிற்கு ஆதரவாக செயற்படுகின்றீர்கள் அதனால்,உங்களை விசாரணை செய்கின்றோம் என்ற வகையில் அவருக்கு ஒரு அழைப்பும் சென்றிருக்கின்றது,இந்த அழைப்பின் ஒலிவடிவம் என்னிடம் உள்ளது.

இதேபோல அம்பாறை மாவட்ட காணாமல்போனோர் உறவினர்களுடைய அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்குகின்ற செல்வராணி என்ற பெண்மணியை இரண்டு மூன்று நாட்களிற்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.