நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தவர்களை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களாக நியமிக்கவேண்டாம்.

 


 

நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தவர்களை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களாக நியமிக்கவேண்டாம் என தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பான பஃவ்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீதிமன்றத்தினால் ஊழல் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தண்டனை விதிக்கப்பட்டவர்களை வேட்பாளர்களாக நியமிப்பதை அரசியல் கட்சிகள் நியமிக்க கூடாது என பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வோரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்தால் குறிப்பிட்ட அரசியல்கட்சிகள்  பொதுமக்களிற்கு பதில்சொல்லவேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வன்முறையற்ற விதத்தில் இடம்பெற்றுள்ள சூழ்நிலையில் அரசியல் கட்சிகளை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பட்டியல் வேட்பாளர்களாக நியமிப்பதற்கு தகுதியானவர்களை அரசியல்கட்சிகள் தெரிவு செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட்டியலில் ஒரு வேண்டத்தகாத வேட்பாளர் நியமிக்கப்பட்டாலும் அது ஒட்டுமொத்த கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

விரும்பத்தகாத அரசியல்வாதிகள் மீண்டும் தெரிவு செய்யப்படுவதை தவிர்க்கும் விதத்தில் மக்கள் வாக்களிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.