கனடாவுக்கு வரும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உள்ளோம்- கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

 


கனடாவில் குடியேறும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையைத் தற்காலிகமாகக் குறைக்கவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவிற்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கான மாணவர் விசாக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜஸ்டின் ட்ரூடோ ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

“இந்த ஆண்டு, 35 சதவீதத்திற்கும் குறைவாகவே வெளிநாட்டு மாணவர்களுக்கு நாங்கள் விசா வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறைக்கப்படும்” என்று கடந்த மாதம் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை அன்று “அடுத்த இரண்டு ஆண்டுகளில் கனடாவுக்கு வரும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உள்ளோம். இதுவொரு தற்காலிக முடிவு. இது எங்கள் மக்கள் தொகை வளர்ச்சியைத் தடுக்கவும், எங்களது பொருளாதாரத்தை உயர்த்தவும் எடுக்கப்பட்டுள்ளது” என்று ட்ரூடோ கூறியுள்ளார்.