மட்டக்களப்பில் சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு கண்ணாடி படகுச்சேவை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனினால் சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு கண்ணாடி படகுச்சேவை மற்றும் சிற்றுண்டிச்சாலை என்பன உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி பங்களிப்பின் கீழ் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன் நெறிப்படுத்தலின் கீழ் இந் நிகழ்வு காயன்கேணியில் (05) திகதி இடம் பெற்றது.
சர்வதேச சுற்றுலா தினம் 2024 இம்முறை சுற்றுலாவும் அமைதியும் எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
எமது நாட்டுக்கு அந்நிய செலவணியை அதிகம் பெற்றுத் தரும் ஒரு துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.
மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் முகமாக கண்ணாடி படகுச்சேவை இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது..
கண்ணாடி படகின் மூலம் பல வர்ண மீன்கள், முருங்கைக்கற்பாறைகள் மற்றும் கடற் தாவரங்களையும் பார்வையிடக்கூடியதாக உள்ளது.
பிரிட்டிஸ் சாஜன்ட் லேடி மேக்கலம் கொரல் பீச் சங்கத்தின் நெறிப்படுத்தலின் கீழ் இந்நிகழ்வு இடம் பெற்றது.
காயன்கேணி கடற்கரைக்கு அண்டிய பிரதேசத்தில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலை பார்வையிடுவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வி.நவநிதன் ரி.நிர்மலன், வாகரை வேள்ட் விசன் லங்கா முகாமையாளர் எ.ரவீந்திரன், மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.